கட்சி முறைகளில் சிறந்தது... 'ஒரு கட்சி முறையா? இரு கட்சி முறையா? பல கட்சி முறையா?’ ஒரு விவாதம்...
பங்கேற்பு: மன்னம்பாடி, அரசு உயர்நிலைப் பள்ளி, ஏழாம் வகுப்பு மாணவர்கள்.
தேவேந்திரன்: ''கட்சி முறைகளில் சிறந்தது ஒரு கட்சி முறைதான். ரஷ்யாவில் இந்த முறைதான் பின்பற்றப்படுகிறது. அப்போதுதான், எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கும்''.
வீரச்செல்வி: ''உலக நாடுகளில் வல்லரசாகக் கருதப்படும் அமெரிக்காவில், இரு கட்சி முறைதான் உள்ளது. அதனால், இரு கட்சி முறைதான் நல்லது.''
வேம்பன்: ''பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகளில் மட்டுமின்றி, நம் இந்தியாவிலும் பல கட்சி முறைதான் உள்ளது. எனவே, பெரும்பான்மை நாடுகள் பின்பற்றும் பல கட்சி முறையே சிறந்தது.''
லைலா: ''பல கட்சி முறை பின்பற்றப்படும் நம் நாட்டில்தான் ஊழல்கள் அதிகம் நடக்கின்றன. எனவே, சமத்துவ சமுதாயம் மலர, ஒரு கட்சி முறைதான் சிறந்தது.''
சிவக்குமார்: ''இரு கட்சி முறையில்... ஒரு கட்சி தவறு செய்தால், மற்றொரு கட்சிக்கு நாட்டை ஆளும் வாய்ப்பு கொடுக்கலாம். எனவே, இரு கட்சி முறையே சிறந்தது.''
வீரவெங்கட்: ''பல கட்சி முறையில் ஊழல் நடந்தால், அடுத்த தேர்தலில் மக்கள் அவர்களுக்கு சரியான பாடம் புகட்டுவார்கள். அப்படி ஒரு வாய்ப்பு பல கட்சி முறைக்கு மட்டுமே உள்ளது.''
மணிகண்டன்: ''ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடு நீங்க வேண்டுமானால், சோஷலிச ஆட்சி வரவேண்டும். அதற்கு ஏற்றது, ஒரு கட்சி முறையே.''
ரஞ்சிதா: ''இங்கிலாந்தும் அமெரிக்காவும் ஒன்றும் தெரியாமலா இரு கட்சி ஆட்சி முறையைப் பின்பற்றுகின்றனர்? வளர்ந்த நாடுகளைப் பார்த்து நாமும் கற்றுக்கொண்டால்தான் முன்னேற முடியும். அதற்கு அடிப்படை, நம் தேர்தல் முறையை மாற்றுவதுதான். எனவே, இரு கட்சி முறைதான் சிறந்தது.''
கௌசல்யா: ''நம் நாட்டைப் போன்ற வளரும் நாடுகளுக்கு, பல கட்சி முறையே ஏற்றது. மக்களாட்சித் தத்துவத்தின் அடிப்படையே இந்த உரிமைதான். எனவே, எல்லோரும் இந்நாட்டு மன்னராக... பல கட்சி முறைதான் ஏற்றது.''
(இது மாதிரியான விவாதத்தை மாணவர்களே தயாரித்து வருமாறு செய்து மதிப்பிடலாம்)
7ஆம் வகுப்பு சமூக அறிவியல் ,அரசியல் கட்சிகள் பாடத்திற்கான செயல்பாடு.
- இரத்தின புகழேந்தி,
அரசு உயர்நிலைப் பள்ளி,
மன்னம்பாடி
நன்றி :
கல்வி விகடன்